Friday, March 25, 2022

வாசிப்பு lll பகுதி - 1


         பகுதி  - 1

www.swasthammadurai.com


ஒவ்வொரு மனிதனும் இந்த உலகில் தன்னைச் சுற்றி நிகழ்கிற நடப்புகளில் ஏற்படும் சங்கடங்களையும் சலிப்புப்புகளையும் கடந்து போக வேண்டும் என்ற மன உந்துதலோடு இருப்பதை பார்க்க முடிகிறது.

சங்கடத்திலிருந்து, சலிப்பில் இருந்து விடுபடவேண்டும் என்று யார் ஒருவரும் நினைத்துக்கொண்டே இருக்கிறார்கள். எந்த மனிதனும் அதற்கு விதிவிலக்காக இல்லை. ஒவ்வொருவருக்குள்ளும் இந்த சங்கடங்கள், சலிப்புகள், அவ நம்பிக்கைகள் எல்லாமும் உடனடியாக மாறி விட வேண்டும் என்கிற எதிர்பார்ப்பும் தவிப்பும் இருந்துகொண்டே இருக்கிறது. இந்த நவீன உலகில் இத்தகைய சங்கடங்கள், தவிப்புகள், வேதனைகள், விடுபட வேண்டும் என்கிற உந்துதல், உத்வேகம் அதிகமானதாக காணமுடிகிறது.

மனிதன் தம் வாழ்வை சமூகமாக வாழத் துவங்கிய காலத்திலிருந்தே கூட இத்தகைய மன ஓட்டங்கள் இருந்திருக்கக்கூடும். மனிதனின் வளர்ச்சிப்போக்கில் இவை தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது என்பதை பார்க்க முடிகிறது. இந்த சங்கடங்களை ஒரு மனிதன் எவ்வாறு எதிர்கொள்வது? என்பதற்கு ஒவ்வொரு நாளும் வெவ்வேறு யுக்திகளை, நுட்பங்களை கண்டுபிடித்த வண்ணம் நகர்ந்து கொண்டே இருக்கிறான்.

இன்றைக்கு கண்டுபிடிக்கப்பட்ட நவீன கருவிகளும் பொருட்களும் கூட தனிமனிதனின் சங்கடம், சிக்கல், சலிப்பு குறைவதற்கும் அவற்றிலிருந்து அவர்கள் விடுதலையாவதற்குமான ஒரு திறவுகோலாக இருக்க வேண்டும் எங்கிற நோக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டவை. எல்லா பொருட்களுக்குள்ளும் அப்படியான மனிதனின் சௌகரியம் ஒளிந்திருக்கிறது. தனிமனிதன் சௌகரியமாக இருக்க வேண்டும், நலமாக இருக்க வேண்டும் என்கிற நோக்கம் எல்லா பொருட்களின் கண்டுபிடிப்பிற்கு பின்னாலும் இருக்கிறது. இத்தனை பொருட்கள் வந்த பிறகு மனிதனின் சங்கடங்கள், சிக்கல்கள் மனப்பரிதவிப்பு தளர்ந்திருக்கிறதா? மாறி இருக்கிறதா? என்று நாம் பார்க்கிற போது அவை தொடர்ந்து அதிகரித்து கொண்ட வண்ணமே இருக்கின்றன. இவற்றை எவ்வாறு கடந்து போவது என்பது ஒவ்வொரு தனிமனிதனுக்கு முன்னாலும் இருக்கிற சமூகம் முழுவதும் இருக்கிற ஒரு பொதுக் கேள்வியாக இருக்கிறது. இவற்றை மாற்றிக் கொள்வதற்கு உளவியல் பார்வையில் நிறைய பரிந்துரைகளை வைக்க முடியும்.

நவீன மனிதனுக்கு தகுந்தார்போல், நவீன மனிதனின் மன ஓட்டத்திற்கு இசைவாக, அவன் முனைப்பை கொம்பு சீவி விடுகிற சொல்லாடல்களை வரிசைப்படுத்தி தன்னை மட்டும் சுயநலமாக விடுவித்துக் கொள்கிற முனைப்புசார் உரையாடல்களை மனிதனிடம் நடத்தி பார்க்க முடியும்.

முழுக்க நேர்மறை எண்ணங்களை உங்களுக்குள் செலுத்திக் கொள்ளுங்கள் என்று மனிதனை சுயவசியம் நோக்கி நகர்த்தக்கூடிய உரையாடல்கள் சங்கடங்களுக்கு எதிராக நடத்தப்படுவது போல், சங்கடங்களை களைவதற்காக முயற்சிக்கப்படுவதுபோல் நடந்துகொண்டே இருக்கின்றன. புதியபுதிய தியான யுக்திகள், ஆன்மீக வழிகாட்டுதல்கள் நடந்துகொண்டே இருக்கின்றன சங்கடங்களில் இருந்து தவிப்பில் இருந்து மனிதனை விடுதலை செய்வதற்கு. புதிய மனோ ஆராய்ச்சிகளும் மனதின் நுட்பமான பகுதிகளை வெளியில் கொண்டு வருகிற உரையாடல்களு நடந்து கொண்டே இருக்கின்றன. இவையெல்லாம் ஒருபுறம் மனிதனுக்கு சங்கடங்கள் தோன்றிய காலத்திலிருந்து, சங்கடமாக நாம் இருக்கிறோம் என்கிற தன்மையில் இருந்து மனிதனை விடுதலை செய்வதற்கு காலங்காலமாக ஏற்பாடு செய்யப்படுகிற செயல்பாட்டு முறை. இவை எப்போதும் பயன்பட்டதில்லை, பயன்படப்போவதுமில்லை.

ஒரு மனிதன் விடுதலையாவதற்கு, சிக்கல்களை கடந்து போவதற்கு வேறொரு நுட்பம் தேவைப்படுகிறது. கிழக்கு நாடுகளில் ஒரு மனிதன் தன்னை முழுமையாக விடுதலை செய்து கொள்வதற்கு சில யுக்திகளை பரிந்துரைக்கிறார்கள்.

கிழக்கு நாட்டு தத்துவங்களை நீங்கள் மேற்கத்திய மனதோடு பார்க்க முடியாது. மனம் என்பதே மேற்கத்தியத் தனமானது. உங்கள் பழைய நினைவுகளில் இருந்து ஒரு முன்முடிவை தொகுத்து வைத்துக் கொண்டு, கிழக்கு நாடுகள் பரிந்துரைக்க எந்த யுக்தியையும் உங்களால் செய்து பார்க்க முடியாது, உள்வாங்கிக் கொள்ள முடியாது. இத்தகைய உள்வாங்கிக் கொள்ள முடியாது சலிப்பும் பரபரப்பும் நிரம்பி வழிகிற ஒரு மனதையும் விடுதலை செய்யக்கூடிய சலிப்பில் இருந்து விடுவிக்கக் கூடிய யுக்தியை கிழக்கு மரபு முன்வைக்கிறது.

கிழக்கு மரபு மனிதனை மூன்று வகை மனிதர்களாகப் பிரிக்கிறது. மூன்று வகை மனிதர்களுக்குரிய யுத்திகளை விரிவாக பேசுகிறது. மனிதர்கள் இவ்வாறுதான் இருக்கிறார்கள் என்று அந்த கோட்பாடுகள் வழியாக நாம் புரிந்துகொள்ள முடியும். எல்லாவற்றிலும் சரணாகதியாக தன் வாழ்வை அமைத்துக் கொள்கிற ஒரு மனித மனோபாவம். எதற்கும் கேள்வி கேட்காத ஒரு மனோபாவம். பின்பு எல்லாவற்றையும் தான் பார்க்கிற வேலையோடு இணைத்து பயணிக்கிற ஒரு மனோபாவம். எல்லாவற்றையும் வேலையாக, தனக்கான கடமையாக செய்து பார்க்கிற இரண்டாவது வகை மனோபாவம். மூன்றாவது ஒவ்வொன்றையும் விசாரிக்கிற மனோபாவம். இதை மூன்றுவகையான பாதையாக, விடுதலைக்குரிய பாதையாக கிழக்கு தொகுத்து வைத்திருக்கிறது. அது சரணாகதி அடைவது பக்திமார்க்கம். முழுக்க பத்தி வழி. இரண்டாவது கர்ம மார்க்கம், மூன்றாவது ஞானமார்க்கம்.

                                                                            தொடர்ந்து பேசுவோம்…

  ALSO READ: திருக்குறள் - வாழ்வியலுக்கான உரையாடல்

 ALSO READ: YOGA

No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...